Friday, February 7, 2014

கோலி சோடா - ஒன்இந்தியா விமர்சனம்

 கோலி சோடா - ஒன்இந்தியா விமர்சனம்

நடிகர்கள்: கிஷோர், முருகேஷ், சாந்தினி, சீதா, பாண்டி, ஸ்ரீராம், மதுசூதன், விஜயமுருகன், சுஜாதா, இமான் அண்ணாச்சி
 
இசை: எஸ் என் அருண்கிரி
 
பின்னணி இசை: சீலின்
 
மக்கள் தொடர்பு: ஜான்சன்
 
வசனம்: பாண்டிராஜ்
 
தயாரிப்பு: லிங்குசாமி
 
ஒளிப்பதிவு - இயக்கம்: விஜய் மில்டன்

பெரிய நடிகர்கள், பிரமாண்ட பட்ஜெட் எதுவும் இல்லாமல் ஒரு கச்சிதமான படம் தந்திருக்கிறார்கள். கதையின் அடிப்படை சற்று பலவீனமாக இருந்தாலும், படத்தை உருவாக்கிய விதம், சீட்டோடு இறுக கட்டிப் போடுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துபவர்கள் புள்ளி (கிஷோர்) சித்தப்பா (பாண்டி), குட்டிமணி (முருகேஷ் ), சேட்டு (ஸ்ரீராம்) ஆகிய நான்கு பெரிய சிறுவர்கள். கூடுதலாக சுஜாதாவின் உதவியுடன் ஆச்சி மெஸ் என்ற சிறு உணவகத்தை நடத்துகிறார்கள். கடைக்கு சொந்தக்காரரான நாயுடு மார்க்கெட்டிலேயே பெரிய தாதா. ஆறு மாதங்களுக்குப் பிறகு வாடகைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார்.

goli soda review


தங்களுக்கான அடையாளமாக இந்த உணவகத்தை நினைக்கும் நால்வரும், அதை மிகவும் ஈடுபாட்டுடன் நடத்தி வருகிறார்கள். ஒரு நாள் இரவு நாயுடுவின் மச்சான் மயிலு உணவகத்துக்கு வந்து, இரவு முழுக்க குடித்து, நண்பர்களுடன் கூத்தடித்து, பஸ்ஸுக்கு காத்திருந்த ஒரு பெண்ணை ஏமாற்றி கூட்டி வந்து கற்பழித்து அராஜகத்தின் உச்சத்துக்கே போகிறான். இதையெல்லாம் பார்த்து கொந்தளிக்கும் நான்கு பையன்களும் மயிலுவை போட்டுத் தாக்கிவிடுகிறார்கள். நாயுடுவுக்கு இது கவுரவப் பிரச்சினையாகிவிட, நான்கு பையன்களையும் மீண்டும் மெஸ் எதிரில் வைத்து தாக்கினால்தான் தன் மரியாதை காப்பாற்றப்பட்டதாக அர்த்தம் என்று கூறி, தாக்க ஆளனுப்புகிறார்.

இந்த சண்டையில் மயிலு மற்றும் அவன் கூட்டாளிகளை கடுமையாகத் தாக்கிவிடுகிறார்கள் சிறுவர்கள். ஆத்திரமடைந்த நாயுடு, பையன்களை கடுமையாகத் தாக்கி, நால்வரையும் பிரித்து நான்கு வெவ்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவிடுகிறார். இந்தப் பையன்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா.. தங்கள் அடையாளத்தை மீட்டார்களா என்பது சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ். படம் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தாலும் இரண்டு பெரிய மைனஸ்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒன்று என்னதான் இந்தப் பையன்கள் தங்களுக்கு அடையாளம் வேண்டும் என்று போராடினாலும், கடைக்கு உரிமையாளர் நாயுடுதானே. அவருக்கு சொந்தமான கடையில் போய் தங்கள் உரிமையை, அடையாளத்தைக் கேட்பது நியாயமில்லையே.
 
goli soda images

இரண்டாவது, பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளை கரெக்ட் பண்ணுவது, காதலிப்பது என வரும் காட்சிகள். இந்த இரண்டையும் தவிர்த்துப் பார்த்தால், கோலி சோடா நன்றாகத்தான் வந்திருக்கிறது. கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் ஆகிய நான்கு சிறுவர்களும் கோயம்பேட்டிலேயே புரண்டு எழுந்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் அத்தனை நிஜம் தெரிகிறது. சுஜாதாவின் மகளாக வரும் சாந்தினி, ஏடிஎம் பாத்திரத்தில் வரும் சீதா, ஆச்சியாக வரும் சுஜாதா ஆகியோர் கொஞ்சமும் மிகையில்லாத நடிப்பைத் தந்துள்ளனர். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையைப் போக்குபவர் இமான் அண்ணாச்சி. குறிப்பாக அந்த காவல் நிலைய காட்சி.

படத்தில் இரு பாத்திரங்கள் மிரள வைக்கின்றன. அத்தனை இயல்பான நடிப்பு. ஒருவர் நாயுடுவாக வரும் மதுசூதன். இன்னொருவர் மயிலாக வரும் ஆர்கே விஜய் முருகன். இருவருக்குமே இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமையும். அருண கிரியின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் சீலினின் பின்னணி இசை படத்தின் வேகத்தை காப்பாற்ற உதவுகிறது. பாண்டிராஜின் வசனத்துக்கு படத்தின் வெற்றியில் முக்கியப் பங்குண்டு! கோயம்பேட்டை தத்ரூபமாகக் காட்டியிருக்கிறது விஜய் மில்டனின் கேமரா. அவரது திரைக்கதையும் காட்சிகளை சமரசமில்லாமல் எடுத்த விதமும் படத்தை வெற்றிக் கோட்டைத் தொட வைத்துள்ளன.
 
ஒன்இந்தியா ரேடிங் - 3.5/5

நன்றி - ஒன்இந்தியா

Friday, January 17, 2014

வீரம் - தினமலர் விமர்சனம்

வீரம் - தினமலர் விமர்சனம்

 veeram review

  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சிவா
 ஆரம்பம் முதல் அஜீத்தின் அதிரடி ஆரம்பம்! என்று சொன்ன அஜீத் தரப்பு அதை மெய்பிக்கும் விதமாக "ஆரம்பம் வெளிவந்த இரண்டே மாதங்களில் "வீரம் படத்தை வெளியிட்டு, தன் பலத்தை காட்டியிருக்கிறது! இதுநாள் வரை "சிட்டிலுக்கில் வந்த "அல்டிமேட் ஸ்டார் இந்தப்படத்தில் வேஷ்டி சட்டையில், முரட்டு கிராமத்து இளைஞனாக, பாசமுள்ள அண்ணனாக பட்டையை கிளப்பி இருக்கிறார்! பலே, பலே!!

கதைப்படி, அஜீத்குமார் ஒட்டன்சத்திரம் விநாயகமாக, விதார்த், "அன்பு பாலா உள்ளிட்ட 4 தம்பிகளுக்கு அண்ணனாக, அந்த ஊரில் அடிதடி, வம்பு, வழக்குகளில் ஈடுபடுவர்களை கூட்டிவந்து வீட்டில் விருந்து வைத்து, அதன்பின் வாயிற் கதவை மூடி அவர்களை நையப்புடைத்து அனுப்பும் நல்லவர்! சிறுவயதில் பெற்றோரை இழந்து 4 தம்பிகளுடன், டீ கிளாஸ் கழுவுவதில் வாழ்க்கையை தொடங்கியவர் விநாயகம் அஜீத், என்றாலும் பல லாரிகளுக்கு முதலாளி, ரைஸ்மில் ஓனர், விவசாயம், வெள்ளாமை, காய்கறி வியாபாரம் என தன் உழைப்பால் தன் குடும்பத்தை தூக்கி நிறுத்தி, ஊரில் பெரும் புள்ளியாக வலம் வரும் அஜீத்தும், அவரது 4 சகோதரர்களும் திருமணம் செய்து கொள்வதில்லை எனும் உறுதியுடன் வாழ்கின்றனர். காரணம், பொண்டாட்டி வந்தால் ஒற்றுமையான சகோதரர்களான தங்களை பிரித்து விடுவார்கள் எனும் நியாயமான பயம்தான்! ஆனாலும், விதார்த்துக்கும், பாலாவுக்கும் அண்ணன் அஜீத்துக்கு தெரியாமல் தலா ஆளுக்கு ஒரு காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது. இவர்களின் அடிதடி வழக்குகளுக்கு ஜாமின் வாங்கிதரும் பெரிய வக்கீலா(!)ன "பெயில் பெருமாள் சந்தானம், தன் காதலையும் உதறிவிட்டு இவர்களது சகோதர ஒற்றுமை கண்டு மெய்சிலிர்த்து அஜீத்தின் 5-வது தம்பியாக ஐயக்கியமாகிறார்.

சந்தானம் கோர்ட்டில் இருப்பதை விட இவர்களுடன் சுற்றும் நேரம் ஜாஸ்தி என்பதால் அவருக்கு விதார்த், பாலாவின் அஜீத்துக்கு தெரியா காதல் தெரிய வருகிறது. அதுமுதல் தன் காதலையும் புதுப்பித்துக் கொள்ளும் "பெயில் சந்தானம், 4 சகோதரர்களுடனும் சேர்ந்து தங்கள் காதலுக்கு அஜீத் சம்மதிக்க வேண்டுமென்றால், அஜீத்தையும் ஒரு பெண்ணின் காதலில் தள்ள வேண்டுமென களம் இறங்குகிறார். அதற்கு ஏதுவாக அஜீத்தின் சிறுவயது நண்பரும், கலெக்டருமான ரமேஷ் கண்ணாவின் ஐடியாபடி, அஜீத்துக்கு பள்ளி பருவத்தில் பிடித்த பெண்ணின் பெயரான கோப்பெருந்தேவி எனும் பெயரில் ஒரு அழகிய இளம் பெண்ணை அஜீத்முன் நிறுத்தினால் எல்லாம் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும், அஜீத்துக்கும் காதல் பிறக்கும் எனும் யோசனை வருகிறது.

அதன்படி புராதான கோயில் சிற்பங்களை அழகுப்படுத்தும் புனிதப்பணி செய்யும் கோப்பெருந்தேவி தமன்னா, அந்த ஊர் கோயில் சிற்பங்களை சீரமைக்க தன் அழகிய இளம் பெண்கள் நிரம்பியகுழுவோடு அங்கு வரவழைக்கப்படுகிறார். ஊர் பெரும்புள்ளி அஜீத்தின் மைனஸ் பாயிண்ட்டுகளை எல்லாம் ப்ளஸ் பாயிண்ட்டாக காட்டி அஜீத் மீது தமன்னாவுக்கு காதல் வர வைக்க முயற்சிக்கின்றனர் சந்தானம் சகோதரர்கள். தமன்னாவுக்கு அஜீத் மீதும், அஜீத்துக்கு தமன்னா மீது ஒரே நேரத்தில் காதல் வருகிறது. ஆனால் அந்த காதலுக்கு, அஜீத் அது வரை சம்பாதித்து வைத்திருக்கும் வில்லன் கோஷ்டியும், தமன்னாவின் அப்பாவும் அகிம்சாவாதியுமான நாசரின் விரோதிகளும் சேர்ந்து உலை வைக்க பார்ப்பதுடன், அஜீத்-தமன்னா ஜோடியையும் அவர்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டவும் களம் இறங்குகின்றனர். அவர்களது சதியில் இருந்து அஜீத்-தமன்னா ஜோடியும், அவர்களது காதலும் தப்பித்து கரை சேர்ந்ததா? கரம் சேர்ந்தனரா.? என்பது வித்தியாசமும், விறுவிறுப்புமான திக், திக் க்ளைமாக்ஸ்!

"அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார், ஒட்டன்சத்திரம் விநாயகமாக ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமெண்ட் என்று வழக்கம் போலவே அடி தூள் பரத்தியிருக்கிறார். அதிலும் அந்த டிரையின் பைட் சூப்பர்ப்! "எல்லோரும் சந்தோஷமா திருப்தியா சாப்பிட்டு போங்க... என அஜீத் என்ட்ரியாகும் ஷாட்டில் பேசும் "பன்ச் வசனத்தில் தொடங்கி, "நம்ம கூட இருக்கிறவங்களை நாம் ஒழுங்காபார்த்துக்கிட்ட நம்மளை நமக்கு மேல இருப்பவன் நல்லா பார்த்துப்பான்... என்றும், "எவ்ளோ பேரு இருக்காங்கறது முக்கியமல்ல... யாரு இருக்காங்ககிறது தான் முக்கியம்... என்றும், "யாருடா அந்த 5வது ஆளு... யாருக்கும் அஞ்சாத ஆளு... என்றும் இடையிடையே அஜீத்தும், அவரை சார்ந்தவர்களும் பேசும் வசனங்களில் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. அதிலும் க்ளைமாக்ஸில் இந்த குடும்பம் உனக்கு என்ன செய்தது? என அஜீத்தை அடித்துபோட்டு வில்லன் அதுல் குல்கர்னி கேட்கும்போதும், இந்த குடும்பம் என்ன செய்யல்ல...?! "அம்மாவா சோறு போட்டாங்க, அப்பாவா சொல்லி கொடுத்தாங்க... என மேலும் பேசும்போது தியேட்டரில் தல, நன்றிகாட்ட, நல்லது செய்ய உனக்கு ஈடு இல்ல தல என ரசிகர்கள் கூக்குரலிடுகின்றனர். "பில்லா, "மங்காத்தா, "ஆரம்பம் மாதிரி டான் கேரக்டர்களுக்கு அஜீத்தின் "சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி ஸ்டைல் ஓ.கே., கிராமத்து இளைஞராக தமன்னாவை காதலிக்கும் பாத்திரங்களிலும் சால்ட் பெப்பர் லுக்கா என ரசிகர்கள் சில இடங்களில் சலிப்படையவும் செய்கின்றனர்.

தமன்னா, கோப்பெருந்தேவியாக அவர் புனரமைக்கும் சிலைகள் மாதிரியே சிலிர்க்க வைக்கிறார்.

சந்தானம் பீடீ ஊதுன வாய்க்கும், பீப்பி ஊதுன வாய்க்கும் எங்களுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று சீனுக்கு சீன் அஜீத்துக்கு ஈக்குவலாக "பன்ச், அதுவும் காமெடி பன்ச் அடித்து தியேட்டரில் மேலும் விசில் சப்தத்தை கிளப்புகிறார். அதிலும், க்ளைமாக்ஸில் அஜீத்-தமன்னா திருமணத்தை சந்தானம் நடத்தி வைத்து ""எவ்வளவு தான் "முரட்டுகாளையா இருந்தாலும், பொண்டாட்டி முந்தியை பிடித்ததும் அப்படியே மாறிடுவிங்களே... என அஜீத்தையும், "வீரம் - முரட்டுகாளை என்பதையும் தெரிந்தோ தெரியாமலோ குத்திக்காட்டும் இடத்தில் தியேட்டர் அதிர்கிறது.(அதிர்ச்சியிலா, சிரிப்பிலா?)

விதார்த், பாலா உள்ளிட்ட அஜீத் சகோதரர்கள், அதுல்குல்கர்னி உள்ளிட்ட வில்லன்கள், நாசர், சுமித்ரா, ஒரே காட்சியில் வரும் மறைந்த பெரியார்தாசன், அஜீத்வீட்டு எடுபிடி அப்புக்குட்டி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் பரவாயில்லை, ஆனாலும் மனதில் நிற்கவில்லை என்பது மைனஸ்!

வெற்றியின் ஒளிப்பதிவு வீரத்திற்கு கிடைத்த வெற்றி.

சிவாவின் இயக்கத்தில் ஒட்டன்சத்திரம் பெரும்புள்ளி விநாயகம் அஜீத், தமன்னாவின் அப்பாவிடம் காதல் சம்மதம் பெற, குடும்பத்துடன் 7 நாட்கள் அங்கேயே ஹால்ட் அடிப்பதும், அவர்களது எதிரிகளை பந்தாடுவதும், ஒட்டன்சத்திரத்தில் அஜீத்துக்கு வேலை இல்லாதது மாதிரி சற்றே லாஜிக்காக இடிக்கிறது!

மற்றபடி, அஜீத்தின், "வீரம் - ஈரம் - சூரம் - தரம்!

Saturday, January 11, 2014

வீரம் - ஒன்இந்தியா விமர்சனம்

வீரம் - ஒன்இந்தியா விமர்சனம்

நடிப்பு - அஜீத், தமன்னா, விதார்த், நாசர், சந்தானம், பாலா, அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத், முனீஷ், சோஹைல்

ஒளிப்பதிவு - வெற்றி

எடிட்டர் - மு காசி விஸ்வநாதன்

வசனம் - சிவா, பரதன்

தயாரிப்பு - விஜயா புரொடக்ஷன்ஸ்

எழுத்து, இயக்கம் - சிவா 

veeram review


தமிழ் சினிமாவின் எவர்கிரீன் வெற்றி ஃபார்முலாவான அண்ணன் - தம்பி பாசம், காதலை கமகம பொங்கல் மசாலாவாகத் தந்திருக்கிறார் இயக்குநர் சிவா. படத்தில் அதிகபட்ச, நம்ப முடியாத ஹீரோயிசம் இருந்தாலும், ஏன் எதற்கு என்று கேட்க வைக்காமல் பரபரவென காட்சிகளை நகர்த்தியிருப்பது ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட வைக்கிறது. மதுரை ஒட்டன்சத்திரம்தான் கதைக் களம். இங்கு தானிய கிடங்கு வைத்திருக்கும் விநாயகம் பிரதர்ஸ் ஐவரில் மூத்தவர் அஜீத். அவருக்கு நான்கு பாசக்கார தம்பிகள். ஐந்தாவது தம்பியாக சேர்ந்து கொள்கிறார் ஜாமீன் வக்கீல் சந்தானம். விநாயகம் பிரதர்ஸின் முழு நேர பணியே தப்பு எங்கே நடந்தாலும், அதை அதிரடியாக தட்டிக் கேட்பதுதான்.

ajith movie veeram review vimarsanam


திருமணம் செய்து கொண்டால் மனைவியாக வருபவள் தம்பிகளைப் பிரித்துவிடுவாள் என்ற பயத்தில் பெண் வாடையே வேண்டாம் என தம்பிகளுக்காக வாழ்கிறார் அஜீத். ஆனால் தம்பிகளோ ஆளுக்கொரு காதலியைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆனால் பின்னர் தங்களுக்காகவே அனைத்தையும் துறந்து வாழும் அண்ணனுக்கு திருமணம் செய்யாமல், நாம் காதலிப்பதில் அர்த்தமில்லை எனப் புரிந்து, திருமண முயற்சியில் இறங்குகிறார்கள்.

அஜீத்துக்கு கோப்பெருந்தேவி என்ற பெயர் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதைப் புரிந்து, அதே பெயரைக் கொண்ட அழகி தமன்னாவை வீட்டுக்குப் பக்கத்தில் குடிவர வைக்கிறார்கள். அஜீத்துக்கும் அவருக்கும் காதல் ஏற்பட பல முயற்சிகளைச் செய்கிறார்கள். அப்போதுதான் தமன்னாவுக்கும் அவர் குடும்பத்துக்கும் அடிதடி வன்முறை என்றாலே பிடிக்காது என்பது தெரிகிறது. இருந்தாலும் பலவித பொய்களச் சொல்லி காதல் ஏற்பட வைக்கிறார்கள். தமன்னாவின் அப்பா நாசரிடம் சம்மதம் வாங்க, அவர்கள் ஊருக்குச் செல்ல, ரயிலில் பகை துரத்துகிறது. ஒரு பயங்கர சண்டை தமன்னா கண் முன்னே நடக்கிறது. அதிர்ந்து நிற்கிறார் மென்மையான தமன்னா...

veeram ajith vimarsanam


ஆனால் அந்த விரோதம் பின் தொடர்வது அஜீத்தை அல்ல.. என்ற உண்மை பின்னர் தெரிகிறது. எதற்காக இந்த விரோதம்.. அஜீத் வன்முறையை விட்டாரா... அஹிம்சாவாதி தமன்னாவை கைப்பிடித்தாரா என்பது மிச்சமுள்ள ஒரு மணி நேரப் படம்!

இந்தப் படத்தில் எத்தனை குறைகள் வேண்டுமானாலும் இருக்கட்டும்... இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அஜீத் போன்ற அண்ணன், விதார்த், பாலா, முனீஷ், சோஹைல் மற்றும் சந்தானம் போன்ற தம்பிகள் உலகத்தில் எங்காவது இருப்பார்களா... இருக்க மாட்டார்களா என ஏங்க வைக்கின்றன ஒவ்வொரு காட்சியும். ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதி வரை அத்தனை பாஸிடிவான பாசம். எங்கே இந்தத் தம்பிகள் துரோகிகளாகிவிடுவார்களோ என பதைக்கிறது மனசு. நல்லவேளை... கடைசி வரை அந்தத் தப்பை செய்யாமல், நேர்த்தியாக நேர்மறைக் காட்சிகளாகவே வைத்த இயக்குநர் சிவாவைப் பாராட்ட வேண்டும்.

ஒரு மாஸ் ஹீரோவுக்கு எப்படி காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதை சிவாவிடம் இளம் இயக்குநர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் அப்படி கச்சிதமாக அமைத்திருக்கிறார். பிரதீப் ராவத் தன் தம்பிகளை துரத்தும்போது, ஆல மர ஊஞ்சலில் சாவகாசமாய் ஆடிக் கொண்டு, பின்னர் தம்பிகளுக்கும் சண்டை சொல்லிக் கொடுத்து எதிரிகளைப் புரட்டியெடுப்பாரே அஜீத்... அடேங்கப்பா, பிரமாதம். தொன்னூறுகளில் ரஜினி படங்களில் பார்த்தவைதான் என்றாலும், இப்போது மீண்டும் பார்க்கும்போது நன்றாகத்தான் உள்ளது!

ajith veeram stills


தமன்னாவுக்கும் அஜீத்துக்கும் காதல் வர வைக்க தம்பிகள் எடுக்கும் முயற்சிகளும், அவர்களுக்கு கூடவே இருந்து ஐடியா கொடுத்தபடி கலாய்க்கும் சந்தானமும் செம செம! இருந்தாலும் ஒரு மாவட்ட கலெக்டரை, இப்படி மாமா வேலை பார்க்கும் அளவுக்கு இறக்கியிருக்க வேண்டாம் (அதான் பள்ளிக் கூட நட்புன்னு சொல்லிட்டாருல்ல இயக்குநர்!).

அஜீத்துக்கு ஏன் நரைமுடி கெட்டப் என்பதற்குக் கூட ஒரு காட்சி வைத்து அத்தனை பேரையும் ஏற்க வைத்திருக்கிறார் சிவா. 

'என்னை என்ன சாதின்னா கேக்குற... நீ தேவர்னா நான் தேவர்... நாடார்னா நானும் நாடார்.. தலித்னா நானும் தலித்... அய்யர்னா நான் அய்யர்.. எனக்கு எந்த மதமும் இல்ல... நீ எப்படிப் பார்க்கறியோ அப்படித்தான் நான்!" கைத்தட்டலும் விசில் சத்தமும் அடக்க ரொம்ப நேரமாகிறது அரங்கில். மாஸ் சீன்-னா அது இதான்!

ajith veeram images


'சோறு போட்டவ தாய்... சொல்லிக் கொடுத்தவன் தந்தை.. இந்த ரெண்டையும் இந்தக் குடும்பம் எனக்குக் கொடுத்தது...' - இந்த வசனத்தை அஜீத் பேசும்போது அத்தனை நெகிழ்ச்சி.

முதல் முறையாக அஜீத்தைச் சுற்றி நிறைய குழந்தைகள்... அதுவும் மிக இயல்பாய், வலிந்து திணிக்காமல். அடுத்து பாராட்ட வேண்டிய விஷயம்... மாட்டு வண்டி, காளைகள், ஆடு மாடுகள் என தமிழ் சினிமா காட்ட மறந்த கிராமிய அடையாளங்களை அஜீத் மூலம் காட்டியிருப்பது. இடைவேளைக்குப் பின், தாடியை எடுத்துவிட்டு கொஞ்சம் மீசையும் (அதில் ஏன் கஞ்சத்தனம்... இன்னும் கொஞ்சம் அதிகமாகவே மீசையை வைத்திருக்கலாம்.. கலக்கலாக இருந்திருக்கும்!), அளவான புன்னகையுமாக அஜீத் வந்து நிற்கும்போது, பத்து வயது குறைந்த இளைஞனைப் பார்க்க முடிகிறது. 

தமன்னா, அவரது அப்பா, குடும்பத்தினருக்குத் தெரியாமலேயே தன் தம்பிகள் துணையுடன் அவ்வளவு பயங்கரங்களையும் அவர் சமாளிக்கும் விதத்தை, கேள்விகளின்றி ஏற்க வைக்கிறார் இயக்குநர்.

முக்கியமாக, எந்தக் காட்சியிலும், வாய்ப்புகள் இருந்தும் அநாவசிய துதி பாடலோ, பில்ட் அப்போ இல்லாமல் பார்த்துக் கொண்டதற்காக அஜீத் - சிவா இருவருக்குமே பாராட்டுகள்.

அஜீத்...இந்தப் படத்தில் நடிக்கவில்லை. அவருக்குப் பிடித்தமாதிரி காட்சிகள் என்பதாலோ என்னமோ, விநாயகமாகவே வாழ்ந்திருக்கிறார். அத்தனை ஈடுபாடு ஒவ்வொரு காட்சியிலும். அவர் அடித்தால் அது நிஜமான அடியாகவே தெரிகிறது பார்ப்பவர்களுக்கு. காதல், நகைச்சுவை, அதிரடி, தம்பிகள் மீது பாசம் என நவரசங்களையும் வஞ்சனையின்றி காட்டுகிறார் மனிதர். வில்லன் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அதிகம் கவர்ந்தார் அஜீத்!

சண்டைக் காட்சிகளில் அநியாயத்துக்கு ரிஸ்க் எடுத்திருக்கிறார் அஜீத். குறிப்பாக அந்த ரயில் சண்டைக் காட்சி. எந்த ஹீரோவும் செய்யத் தயங்கும் காட்சி இது.

தமன்னா... சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அழகான மறுவரவு. அழகு, நடிப்பு எதிலும் குறைவைக்கவில்லை. வெல்கம் பேக்! இந்தப் படத்தில் கடைசி வரை கலகலப்பு குறையாமல் பார்த்துக் கொண்டதில் சந்தானத்தின் பங்கு கணிசமானது. மனிதர் செம பார்மில் இருக்கிறார். வாயைத் திறந்தால் நமக்கு வயிற்று வலி நிச்சயம், சிரிப்பில். 'அண்ணே என்னையும் உங்க பிரம்மச்சரிய தம்பிக லிஸ்டில் சேத்துக்கங்க' எனும் சந்தானத்தை, 'வாடா செல்லம்... வாடா..' என அஜீத் அணைத்துக் கொள்ளும் விதம்...

இனி சந்தானத்துக்கு ஏறுமுகம்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது! தம்பிகளாக வரும் விதார்த், பாலா, முனீஷ், சோஹைல் ஆகிய நால்வருக்குமே சம வாய்ப்பு. ஆமாம்... எல்லா இடங்களிலும நால்வருமே நீக்கமற நிற்கிறார்கள். ஆனால் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவிலாவது இப்படி அண்ணன் தம்பிகளைப் பார்க்கிறோமே என்று!

தமன்னாவின் தந்தையாக வரும் நாசர் பாத்திரம் அருமை. பிரதீப் ராவத் ஏதோ பெரிசாக செய்யப் போகிறார் என்று பார்த்தால், பாட்ஷா படத்தில் வரும் சேது விநாயகம் மாதிரி பம்மிவிட்டு வடக்குப் பக்கம் ஜூட் விடுகிறார்.

இடைவேளைக்குப் பின் வரும் அதுல் குல்கர்னி செம டெர்ரர். நாசர் குடும்பத்துக்காக அஜீத் செய்த அத்தனை தியாகங்களையும் அதுல் குல்கர்னி தன் வாயாலேயே சொல்வதுபோல காட்சி அமைத்தது நல்ல புத்திசாலித்தனம். வேறு எந்த வகையிலும் அந்த முடிச்சை அவிழ்க்கவும் வழியில்லை! குறைகள்... அதற்குப் பஞ்சமில்லை. முக்கியமான குறை... எதிரி நினைக்கும் முன்பே ஹீரோ அவரை மடக்குவது போன்ற சூப்பர் ஹீரோ சாகஸங்கள். ஆனால் அதை மறக்கடிக்கும்விதமாக திரைக்கதை அமைப்பதுதானே இன்றைய சினிமா? அதில் ஜெயிக்கிறது வீரம்! 

ajith veeram stills


வெற்றியின் ஒளிப்பதிவு மிகக் கச்சிதம். ரசிகர்களை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரு திருவிழா மனநிலையிலேயே வைத்ததில் இவரது கேமராவுக்கும் தேவி ஸ்ரீ பிரசாதின் பின்னணி இசைக்கும் பெரும் பங்குள்ளது. இரண்டு பாடல்கள் பரவாயில்லை.

அஜீத்தை ஒரு இயக்குநராக மட்டும் பார்க்காமல், அவரது ரசிகராகவும் பார்த்ததால்தான் தன்னால் இப்படி ஒரு திரைக்கதையை எழுத முடிந்தது என்றார் இயக்குநர் சிவா. அது நூறு சதவீதம் உண்மை. அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களை, முதலில் ரசிக்கத் தெரிந்தால்தான் அவர்களுக்கான அட்டகாசமான திரைக்கதையை ஒரு படைப்பாளியால் உருவாக்க முடியும்.

அந்த வகையில் வீரம்... செம மாஸ்.. பொங்கல் பண்டிகை உற்சாகத்தை ஒரு படி அதிகமாக்கியிருக்கிறது!

நன்றி - ஒன்இந்தியா

Friday, January 10, 2014

ஜில்லா - ஒன்இந்தியா விமர்சனம்

ஜில்லா - ஒன்இந்தியா விமர்சனம்

நடிப்பு - விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, மகத், சம்பத், பூர்ணிமா ஜெயராம் 
இசை - டி இமான்
ஒளிப்பதிவு - கணேஷ் ராஜவேலு
தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி
இயக்கம் - ஆர்டி நேசன் 

jilla movie review
ஆக்ஷன் கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஆனால் அதற்காக இப்படியா? என்ற கேட்க வைக்கிற, கற்பனையை தோற்கடிக்கும் போலீஸ் ஸ்டோரி, விஜய் - மோகன்லால் நடித்துள்ள ஜில்லா. மதுரையின் அசைக்கமுடியாத தாதா மோகன்லால். தன்னை எதிர்க்க வேண்டும் என்ற நினைக்கு ஒருவனுக்கு எழுந்தாலே அவனை அழித்துவிடும் சிவன்.

அவரது வளர்ப்பு மகன்தான் விஜய். தன் ஒரிஜினல் அப்பாவை கண்ணெதிரிலேயே போலீஸ் சுட்டுக் கொன்றதைப் பார்த்த பிறகு, காக்கிச் சட்டை என்றாலே மகா வெறுப்பு.. எந்த அளவு தெரியுமா, தான் விழுந்து விழுந்து காதலிப்பவள் ஒரு போலீஸ் என்று தெரிந்ததும், அவளைக் கைகழுவும் அளவுக்கு. ஆனால் சூழ்நிலை, விஜய்யை காக்கிச் சட்டை போட வைக்கிறது. தன் அப்பாவுக்கு சாதகமான போலீசாக ஜாலியாக சுற்றும் விஜய், ஒரு கோர விபத்தைப் பார்த்த பிறகு அப்பாவின் தாதாயிசத்தை அடியோடு ஒழிக்க முடிவு கட்டுகிறார். மோகன்லாலுக்கும் விஜய்க்கும் இடையில் யுத்தம் ஆரம்பிக்கிறது... அது எப்படி முடிவுக்கு வருகிறது என்பதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள். பல லாஜிக் ஓட்டைகளில் சிக்கித் தவிக்கும் இந்தப் படத்தை கொஞ்சமேனும் காப்பாற்றுபவர்கள் இருவர்.. ஒருவர் விஜய். அடுத்தவர், சந்தேகமென்ன.. மோகன்லால்தான். இந்த இருவரையும் பார்ப்பதற்காக மட்டும்தான் கடைசி வரை இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

அதிலும் விஜய்... அல்டிமேட். இந்தப் படத்தில் தன் உடல் மொழியை மொத்தமாக மாற்றியிருக்கிறார் (ஆனால் அந்த வசன உச்சரிப்பு, சொதப்பிபைய்ங்!). சுழன்று சுழன்று அடிக்கும் அந்த சண்டைக் காட்சி, கற்பூரம் மாதிரி அடுத்து நடப்பதை யூகித்து வியூகம் வகுக்கும் மின்னல் வேகம்... என மாஸ் ஹீரோவுக்கான அத்தனை விஷயங்களையும் சர்வ சாதாரணமாய் செய்கிறார். அந்த கண்டாங்கி கண்டாங்கி பாடலில் விஜய் மனசை அள்ளுகிறார்... ஷங்கர் ஸ்டைல் பிரமாண்டம், அழகு... காஜலும், அந்த அட்டகாச லொகேஷனும் கூடத்தான்! சினிமாக்காரர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளான கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸுக்கெல்லாம் அர்த்தம் தெரியணும்னா... இந்தப் பாட்டைப் பார்க்கலாம்! மோகன் லால் கம்பீரமாக வருகிறார். மகனோடு விளையாடும் காட்சியிலும் சரி, மோதும் காட்சியிலும் சரி... மகா இயல்பு. ஆனால் இந்த மாபெரும் கலைஞனை, ஏதோ கோயில் யானையைப் போல ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் கட்டி முடக்கிவிட்டது போலத்தான் காட்சிகள் அமைந்துள்ளன. சும்மா சும்மா அவர் உறுமிக் கொண்டே இருந்தால் போதுமா... அவர் பலத்தை, புத்திசாலித்தனத்தைக் காட்டும் காட்சி, அட்லீஸ்ட் ஒன்றாவது வேண்டாமா?

இவருக்கு என்ன சிக்கலென்றாலும், அதைத் தீர்க்க விஜய் மட்டும்தான் வரவேண்டியிருக்கிறது. இது மோகன்லால் பாத்திரத்தை டம்மியாக்குகிறதே! துப்பாக்கிக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார் காஜல். கண்டாங்கி கண்டாங்கி பாடல், அந்த என்சிசி கேம்ப், அப்புறம் இரண்டு 'பேக் டு பேக்' மசாஜ் காட்சிகளில் மட்டும் மனசில் நிற்கிறார். மற்ற காட்சிகளில் முகத்தில் ஒரு முதிர்ச்சி.. அவரை விட விஜய் இளமையாகத் தெரிகிறார்! சூரிக்கு படம் முழுக்க வரும் காமெடியன் வேடம். ஆனால் அடிக்கடி முன்பக்கத்தில் அடிவாங்கி, வாயில் புகைவிடும் பரிதாப கேரக்டர். அவரது வேலையையும் விஜய்யே செய்துவிடுவதால், இவர் சும்மா வந்து போக வேண்டியுள்ளது. பூர்ணிமா பாக்யராஜ், இறுதிவரை ஒரு நல்ல அம்மாவாக வருகிறார். பெறாத மகன் என்றாலும் கடைசி வரை மாறாத பாசம் காட்டி மனதில் பதிகிறார். அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு பூர்ணிமா என்ற 'நல்ல அம்மாவை' தொடர்ந்து திரையில் பார்த்து நெகிழலாம். இப்படி ரசிக்கும்படியான காட்சிகள், திறமையான கலைஞர்களின் பங்களிப்பு இருந்தாலும்... மோசமான ஓட்டைகள் நிறைந்ததாக உள்ளது ஜில்லா.

ஒரு நேர்மையான கமிஷனர்... அவர் கையை நடுரோட்டில் வெட்டுகிறார் ரவுடியான விஜய். அவரை போலீஸ் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் அவரோ, ஜாலியாக போலீஸ் ஆகிறார். யாரை வெட்டினாரோ அவர் மூலம் பதவி உயர்வே பெறுகிறார்! ஒரே நேரத்தில் தந்தையைப் பறிகொடுத்த விஜய்யும் சம்பத்தும் மோகன்லால் வீட்டில் வளர்கிறார்கள். இளமையில் ஒரே வயதுக்காரர்களாய் இருக்கும் இவர்கள் வளர்ந்த பிறகு, சம்பத்துக்கு மட்டும் அவ்வளவு வயசாகிவிடுவது எப்படி என்று புரியவில்லை. என்னதான் மோசமான தாதாவாக இருந்தாலும், பெற்ற மகனை (மகன்) ஏவி நகரம் முழுக்க வன்முறையைத் தூண்டை வைப்பாரா.. அதுவும் அத்தனை சேனல்களிலும் பப்பரப்பே என படமெடுத்து வெளியிடும் அளவுக்கு? அடுத்தடுத்து இரண்டு டூயட்டுகள். அதில் ஒன்று ரசிக்க வைத்தாலும், அடுத்த பாடலில் (எப்ப மாமா ட்ரீட்), நடனத்தில் இணையற்ற விஜய்யை கேவலமாக, ஏதோ உடற்பயிற்சி செய்ய வைப்பது போல், ஆட வைத்து கடுப்பேற்றியிருக்கிறார் இயக்குநர் நேசன். அதை மன்னிக்கவே முடியாது!


3 மணி நேரம் படத்தை இழுப்பது இன்னொரு கொடுமை. இந்தப் படத்தை இரண்டே கால் மணி நேரத்துக்குள் சுருக்கியிருக்க முடியும். எடிட்டர் டான் மேக்ஸ் தூங்கிவிட்டார் போலிருக்கிறது. ஆர்கேவை வீணடித்திருக்கிறார்கள். அவரை வைத்து இன்னும் சுவாரஸ்யமான இரு காட்சிகளை வைத்திருக்கலாம், தனக்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பு எப்பேர்ப்பட்ட மகத்தானதென்ற நினைப்பு இயக்குநருக்கு இருந்திருந்தால்! விஜய்யின் தம்பி, தங்கையாக வரும் மகத், நிவேதிதா இருவரும் விஜய்க்கு ஆகாதவர்களைப் போல காட்டிவிட்டு, திடீரென்று இருவருக்கும் அவர் மீது பாசம் பொங்குவது எடுபடவில்லை. கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. அந்த நெடுஞ்சாலைக் காட்சிகள் பிரமாண்டமாக உள்ளது. கண்டாங்கி கண்டாங்கி பாடலில் வண்ணமயம். இமானின் இசையும் அந்தப் பாட்டில்தான் ஓஹோ. மற்றவற்றில் பெரிதாக ஒன்றுமில்லை.

ஆனால், தலைவாவோடு ஒப்பிடுகையில் 100 சதவீதம் பார்க்கலாம் ரக படமே. பொங்கல் லீவில் வெட்டு வெட்டென்று உட்கார்ந்திருப்பதை விட அல்லது மொக்கையான டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு, இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம் (இப்போது 10 நிமிட காட்சிகளை தூக்கிவிட்டார்களாம்)!

நன்றி - ஒன்இந்தியா