Friday, December 27, 2013

என்றென்றும் புன்னகை - ஒன்இந்தியா விமர்சனம்

என்றென்றும் புன்னகை - ஒன்இந்தியா விமர்சனம்

endrendrum punnagai

Rating: 3.5/5

 நடிப்பு: ஜீவா, த்ரிஷா, சந்தானம், வினய், நாசர், ஆன்ட்ரியா
 
ஒளிப்பதிவு: ஆர் மதி
 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
 
தயாரிப்பு: தமிழ்க்குமரன்
 
வெளியீடு: ரெட் ஜெயன்ட்
 
இயக்கம்: அகமது
 
 
நட்பு மற்றும் உறவுகளின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள ஈகோ எத்தனை பெரிய தடையாக உள்ளது என்பதை ரொம்ப வண்ணமயமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்றென்றும் புன்னகையில்.

நாசர் மகன் ஜீவா சின்ன வயசாக இருக்கும்போதே, அவர் அம்மா வேறொருவருடன் ஓடிப் போகிறார். இதை தந்தை சொல்லக் கேட்டு பெண்கள் மீதே வெறுப்பு கொள்கிறார் ஜீவா. வேறு பெண்ணை இரண்டாவதாக நாசர் மணந்து கொள்ள, தந்தை மீதும் மகா வெறுப்பு. அந்த வெறுப்புக்கு பயந்து மனைவியை பிரிந்து மகனே உலகம் என நாசர் வாழ்ந்தாலும், அவருடன் பேச மறுக்கிறார் ஜீவா. பள்ளியில் நண்பர்களாக அறிமுகமாகும் சந்தானம் மற்றும் வினய்தான் ஜீவாவின் உலகம். மூவரும் திருமணமே செய்து கொள்ளாமல் 'மொட்டப் பசங்களாகவே' இருப்போம் என சத்தியம் செய்து கொண்டு, கூடிக் குடித்து மகிழ்கிறார்கள். அப்போதுதான் த்ரிஷா வருகிறார் அவர்கள் வாழ்க்கையில். செய்த சத்தியத்தை மீறி சந்தானமும் வினய்யும் வீட்டில் பார்க்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ள, ஜீவா நண்பர்களை வெறுத்து தனி மரமாகிறார். இவர் வாழ்க்கையில் காதலும், நட்பும் எப்போது எப்படி நுழைகிறது, தந்தை மீதான வெறுப்பு எப்படி மறைகிறது என்பது க்ளைமாக்ஸ். அதிரடித் திருப்பங்கள், ஆக்ஷன் காட்சிகள், கொப்பளிக்கும் ரத்தக் குழம்புகள் என எதுவும் இல்லாத படம் இது.
 
ஆனால் காட்சிகளின் அழகும், வண்ணமும் - அவற்றின் செயற்கைத் தன்மையை மீறி - ரசிக்க வைக்கின்றன. தாங்க்ஸ் டு ஒளிப்பதிவாளர் ஆர் மதி மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்! இந்த இருவரும் இல்லாவிட்டால், நிச்சயம் இந்தப் படம் தேறியிருக்காது. மதி படம் பிடித்திருப்பது நம்ம சென்னையைத்தானா என்ற சந்தேகம், நிகழ்வுகள் சுவிட்சர்லாந்துக்கு மாறும் வரையிலும் தொடர்கின்றன. எப்போதும் மழையில் குளித்து வந்த மாதிரியே தெரிகிறது சென்னை. அதேபோல சுவிட்சர்லாந்து காட்சிகளில், நிஜமாகவே பனிக்குளிரை அனுபவிக்கிறது மனசு. படம் நெடுக ஒரு அழகிய நாயகியைப் போல நம்மை தொட்டும், இறுகத் தழுவியும் இனிமைப்படுத்துகிறது ஹாரிஸ் ஜெயராஜ் இசையும் பாடல்களும். காட்சிகளின் நேர்த்தியைப் பார்த்ததும் ஹாரிஸின் கற்பனை துள்ளிக் குதித்திருப்பதை உணர முடிகிறது.

படத்தில் ஜீவா, சந்தானம், வினய், த்ரிஷா, ஆன்ட்ரியா, நாசர் என ஆறு பேருக்குமே கிட்டத்தட்ட சம வாய்ப்புகள்தான். அத்தனை பேரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். அநாவசிய நட்பு அல்லது காதல் தத்துவங்கள் எதுவும் இல்லாதது பெரிய ஆறுதல். ஜீவா பெண்கள் மீது வெறுப்பைக் கக்கும் போதெல்லாம், எதுக்கு இவ்ளோ டென்ஷனாகிறார் என பார்வையாளர்களே கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் தெரிய வரும்போது, கன்வின்ஸ் ஆக வைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்திய திரைக்கதை. ஏக சர்ச்சைகளில் சிக்கியிருந்த சந்தானத்துக்கு இது மறுபிறவி எனலாம். படத்தில் எங்குமே ஆயாசம் தெரியாமல் இருக்க முக்கிய காரணம் சந்தானம்தான். அந்த சர்ச்சைக்குரிய அஞ்சு பத்து வசனக் காட்சியை அழகாக மாற்றியிருக்கிறார். வெல்டன். வினய் ஒரு நடிகர் மாதிரி இல்லாமல், அந்தக் கதைக்கான ஒரு பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இதற்கு முன் வந்த படங்களில் இருந்ததைவிட இயல்பான நடிப்பு.
த்ரிஷா பிரமிக்க வைக்கிறார். இத்தனை ஆண்டுகள் ஒரு நடிகை தன் அழகைப் பாதுகாப்பது பெரும் சவால்தான். அதில் நூறு சதவீதம் ஜெயித்திருக்கிறார். மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். குறிப்பாக அந்த சுவிட்சர்லாந்து காட்சியில், பனியில் மிதந்து வரும் தேவதை போல அத்தனை அழகு. ஜீவா - த்ரிஷா காட்சிகளில் அபார ரசாயன மாற்றம் (அதாங்க கெமிஸ்ட்ரி!) இத்தனை சிறப்புகள் இருந்தாலும் படத்தில் எதற்காக தடுக்கினால் ஒரு சரக்குப் பார்ட்டி அல்லது குடி காட்சி? அதிலும் ஒருபடி மேலே போய், டாஸ்மாக் பாருக்குப் பதில், வீட்டுக்குள்ளேயே, தந்தை முன்னிலையில் அல்லது அவருடன் சேர்ந்தே சரக்கடிப்பது சகஜமான சமாச்சரம் என காட்டியிருக்கிறார் இயக்குநர். இனி 'மது நாட்டுக்கு, வீட்டுக்கு நல்லது... அனைவரும் சேர்ந்து சரக்கடிப்போம்' என முன்குறிப்பு போட்டே படத்தைத் தொடங்குவார்கள் போலிருக்கிறது.
படம் முழுக்க நண்பர்கள் மூவரும் சேர்ந்தால் ஒன்று சரக்கடிக்கிறார்கள்... அல்லது கழிவறையில் கதையளந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல அந்த க்ளைமாக்ஸ் காட்சியில், ஜீவா த்ரிஷாவிடம் பேசும்போதி ஒரு இயல்புத்தன்மையோ, உணர்ச்சியோ.. தன் கைவிட்டுப் போகவிருந்த அரிய உறவு கிடைத்ததே என்ற குறைந்தபட்ச மகிழ்ச்சி கூட இல்லாமல், ஏதோ சடங்குக்குப் பேசுகிறார். படத்தின் முக்கிய காட்சியை இப்படி ஏனோ தானோ என்றா எடுப்பார்கள். கடற்கரையில் வைத்து ஜீவாவை த்ரிஷா கேட்கும் அத்தனை கேள்விகளும் சரியானவை. ஒரு பெண்ணின் நியாயமான உணர்வும்கூட. ஆனால் அதை மதிக்கும்படியான, தன்னைப் போன்ற சக மனுஷியான அவளை சமாதானப்படுத்தும்படியான எந்த பதிலையும் ஜீவா சொல்லவே இல்லை. மாறாக ஐ லவ் யூ என்கிறார். ஐ லவ் யூ என்று சொல்லிவிட்டால், பெண் எல்லாவற்றையும் துடைத்துப்போட்டுவிடுவாள் என்று அர்த்தமா?

ஆனால் படத்தை ரசிக்க இவை எதுவுமே தடையாக இல்லை என்பது பார்வையாளர்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், அதுவும் அப்பாவுடன் குடிக்கிற காட்சிகளை கைத்தட்டி ரசிக்கும்போது, நாம் என்ன சொல்லி என்ன பயன்? இந்த வார இறுதியை என்றென்றும் புன்னகையுடன் கொண்டாடலாம்!

நன்றி - ஒன்இந்தியா

Wednesday, December 25, 2013

என்றென்றும் புன்னகை - தினகரன் விமர்சனம்

என்றென்றும் புன்னகை - தினகரன் விமர்சனம்


ஜீவா, வினய், சந்தானம் மூவரும் பிரண்ட்ஸ். விளம்பர கம்பெனி நடத்துகிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை. காரணம் ஜீவாவின் அம்மா, அப்பாவை விட்டு விட்டு ஓடிப்போக, பெண் இனத்தின் மீதே வெறுப்பு ஜீவாவுக்கு. அதனால் காதல், கல்யாணம் மீது வெறுப்பு. வினய்யும், சந்தானமும், நண்பன் லட்சியத்தை தாங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று நண்பர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள, தனிமரமாக நிற்கிறார் ஜீவா. இந்த நிலையில் அவர் கம்பெனிக்கு இன்னொரு கம்பெனியின் பிரதிநிதியாக வருகிறார் த்ரிஷா. படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்து செல்கிறார்கள். பனிமலை குளிரில் ஜீவாவின் லட்சியமும் கரைந்து காதலாகிறது.

சென்னை திரும்பும் வழியில் விமான நிலையத்தில் பழைய நண்பன் ஒருவனை சந்திக்க, அவன் ஜீவாவின் பிரம்மசாரியத்தை மெச்ச உடன் வந்த த்ரிஷாவை, சும்மா பிளைட்டில் அறிமுகமானவர் என்று சொல்ல, சுவிஸில் பூத்த காதல் சென்னை ஏர்போர்ட்டில் டமால் ஆகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதி கதை.கதையை காமெடியும், கவிதையுமாகச் சொல்லியிருப்பதன் மூலம் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். நண்பர்கள் திடீர் திருமணம் செய்து கொள்வதற்கான காரணமும், த்ரிஷா&ஜீவா காதல் முறியும் தருணமும் எதிர்பாராத ட்விஸ்ட்டுகள்.

ஜீவாவின் லட்சியத்தை சோதிக்கும் சூப்பர் மாடல் ஆண்ட்ரியாவின் கேரக்டரும், அவரது காது கடியும், இவரது கன்னத்தில் அடியும் சீரியசான கிக் மேட்டர்கள். சுவிஸ்சில் ஜீவாவை பழிவாங்க நினைக்கும் ஆண்டரியாவிடம், நீ இன்னும் கிளம்பலையா? என்று கேட்டு அதிர வைக்கும் ஜீவாவின் கேரக்டர் ரொம்பவே ஸ்ட்ராங்.காதலை வெறுப்பதும், அம்மாவின் துரோகத்தை நினைத்து வெதும்புவதும். அப்பாவை தள்ளி வைத்திருப்பதுமான கனமான கேரக்டரை ஈசியாக சுமக்கிறார் ஜீவா. காதலை பற்றி பேசும்போது அவர் முகத்தில் கோபம் வெடிப்பதும், தக்க சமயத்தில் உதவும் த்ரிஷா மீது நன்றி பார்வை வீசி, அதையே காதல் பார்வையாக மாற்றுவதுமாக ஸ்கோர் பண்ணுகிறார்.அறிமுக நடிகைபோலவே பிரஷ்சாக இருக்கிறார் த்ரிஷா.

தலைமுடி பறக்க அவர் நடந்து வரும் அழகே தனிதான்.சந்தானத்தின் காமெடிதான் படத்துக்கு பலம். போனில் மனைவியிடம் சாப்பிட என்ன வச்சிருக்க? என்று சந்தானம் கேட்க, பதிலுக்கு மனைவி, ‘ஒரு கிளாஸ் விஷம் வச்சிருக்கேன்’ என்று கோபப்பட, அப்ப நீ சாப்பிட்டுட்டு படுத்துக்கோ. நான் வரலேட்டாகும் என்று இவர் சொல்ல, அள்ளு கிறது தியேட்டர்.நண்பன் வினய், மகனின் அன்புக்கு ஏங்கும் தந்தை நாசர் இருவருமே சரியான நடிப்பை தந்திருக்கிறார்கள்.எப்போதும் குடி குடி என்று நண்பர்கள் கழிப்பது ஒரு கட்டத்தில் வெறுப்படைய வைக்கிறது. அப்பாவுடன் ஜீவா பேசாமல் இருப்பதற்கான காரணத்தில் அழுத்தம் இல்லை.மதியின் ஒளிப்பதிவு, சுவிட்சர்லாந்தின் அழகை அள்ளி வந்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களில் அவரது முந்தைய படப் பாடல்களின் வாசனை.


நன்றி - தினகரன்

தினகரன்

Saturday, December 21, 2013

பிரியாணி - ஒன்இந்தியா விமர்சனம்

பிரியாணி - ஒன்இந்தியா விமர்சனம்

biriyani review

Rating: 3.5/5

நடிப்பு: கார்த்தி, பிரேம்ஜி, ஹன்சிகா, சம்பத், ராம்கி, மான்டி தக்கர்
 
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
 
இசை: யுவன் சங்கர் ராஜா
 
மக்கள் தொடர்பு: ஜான்சன்
 
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
 
இயக்கம்: வெங்கட் பிரபு


 கதை இருக்கிறதோ இல்லையோ.. பார்வையாளர்களை இரண்டரை மணி நேரம் திரையரங்கில் இழுத்துப் பிடித்து உட்கார வைப்பதில் கில்லாடி வெங்கட் பிரபு. ஒரு பொழுதுபோக்குப் படத்துக்குரிய அத்தனை மசாலாக்களையும் இந்தப் படத்திலும் சரியாகச் சேர்க்க முயன்றிருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

முதல் பாதியை மட்டும் இன்றும் விறுவிறுப்பாக்கியிருந்தால், பிரியாணி இன்னும் சுவையாக வந்திருக்கும். சரக்கை மெயின் டிஷ்ஷாகவும், பிரியாணியை சைட் டிஷ்ஷாகவும் சாப்பிடும் பார்ட்டி கார்த்தி. பெண் பித்தர். அவரது இணை பிரியாத நண்பன் பிரேம்ஜி. ஒரு நாள் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஷோரூம் திறக்க ஆம்பூர் போகிறார்கள். இரவு நேரமாகிவிடுகிறது. ஆனாலும் ஆம்பூருக்கு வந்து பிரியாணி சாப்பிடாமல் போவதா என பிரியாணி கடை தேடுகிறார்கள். ஒரு இடத்தில் நிறுத்தி சாப்பிடும் போது, மாண்டி தக்கரைப் பார்க்கிறார்கள். அவரது அழைப்பின்பேரில் எல்லோரும் சேர்ந்து சரக்கடிக்க ஓட்டலுக்குப் போகிறார்கள். விடிய விடிய குடி. காலையில் கண்விழித்தால் கார்த்தி மட்டும் எங்கோ அத்துவான காட்டில் நிற்கிறார். பிரேம்ஜி இல்லை. அவரைத் தேடி மீண்டும் ஓட்டலுக்குப் போகிறார். போதை தெளியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் பிரேம்ஜியை அழைத்துக் கொண்டு வெளியேறும்போது, போலீஸ் பிடிக்கிறது இருவரையும்.
வரதராஜன் என்ற பிரபல தொழிலதிபரை கடத்தியதாக கைது செய்கிறார்கள். போலீசை அடித்து துவைத்து தப்பிக்கிறார்கள் கார்த்தியும் பிரேம்ஜியும். காரில் ஏறித் தப்பித்த பிறகு, ஒரு இடத்தில் நிறுத்திப் பார்த்தால் கார் டிக்கியில் வரதராஜன் பிணம். மீண்டும் போலீஸ் துரத்தல், இருவரும் ஓட ஆரம்பிக்கிறார்கள். இறுதியில் எப்படி இந்த கொலைப்பழியிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பது செம விறுவிறுப்பு ப்ளஸ் புத்திசாலித்தனமான க்ளைமாக்ஸ். இந்தப் படத்தில் தன் வேடம் என்னவோ அதை உணர்ந்து அந்த அளவுக்கு மட்டும் நடிப்பைத் தந்திருக்கிறார் கார்த்தி. குறிப்பாக அவரது முக பாவங்கள், உடல் மொழி இந்தப் படத்தில் சிறப்பாக உள்ளது. காதலியிடம் தன்னை நல்லவனாகக் காட்ட பிரேம்ஜியை மாட்டிவிடும் காட்சிகளில் சிரிப்பலைகள்.

இன்னொரு ஹீரோவாக பிரேம்ஜி. வெங்கட் பிரபுவைத் தவிர, இவரை யாராலும் இத்தனை சரியாக பயன்படுத்த முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார். முந்தைய படங்களைப் போல, எந்த பஞ்ச் வசனமும் இல்லை.. ஆனாலும் அப்பாவியாக சிக்கலில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளில் இயல்பாக செய்திருக்கிறார். நண்பனுக்காக எதையும் சந்திக்க தயாராகும் போது, தன்னாலும் உருக்கமாக நடிக்க முடியும் என்று காட்டுகிறார். ஹன்சிகாவை ஏன் இப்படி வீணடித்தார் வெங்கட் பிரபு என்று தெரியவில்லை. அதேபோல ஜெயப்பிரகாஷ்.

ஆனால் ராம்கியும், ஹிட் வுமனாக வரும் உமா ரியாசும் கவர்கிறார்கள். மான்டி தக்கர் கவர்ச்சியின் எல்லைக்கே போயிருக்கிறார். நாசர், பிரேம், சம்பத் தங்கள் வேலையைச் சிறப்பாக செய்துள்ளனர். ஒரு காட்சியில் வரும் ஜெய்க்கு வெங்கட் பிரபு தந்திருக்கும் அறிமுகம் இருக்கே... சிரிப்புச் சத்தத்தில் தியேட்டர் அதிர்கிறது! ஒரு த்ரில்லர் என்றால், அந்த சஸ்பென்ஸ் முடிச்சு கடைசி காட்சிக்கு முந்திய காட்சி வரை அவிழக்கூடாது என்பதை இந்தப் படத்தில் அருமையாகக் காட்டியுள்ளார் வெங்கட்பிரபு. படத்தில் உள்ள மைனஸ்களை மறக்கடிப்பது அவரது இந்த புத்திசாலித்தனம்தான்.
யுவனின் பின்னணி இசை படத்துக்கு பலம். அந்த மிஸிஸிப்பி பாடலில் கலக்கியிருக்கிறார். சக்தி சரவணன் கேமரா சேஸிங் காட்சிகளில் பரபரக்கிறது. படத்தின் மைனஸ் முதல் பாதி... சதா சரக்கு, பெண்கள் என்று ஒரேமாதிரி காட்சிகள். குடியை குடும்பத்தின் கட்டாயப் பழக்கமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் ஈடுகட்டுகிறது இரண்டாம் பாதி. அதற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்!
நன்றி - ஒன்இந்தியா

Wednesday, December 18, 2013

தகராறு - தினமலர் விமர்சனம்

தகராறு - தினமலர் விமர்சனம்

thagararu review
  
வம்சம் , மெளனகுரு படங்களைத் தொடர்ந்து அருள்நிதி நடித்திருக்கும் திரைப்படம், அருள்நிதியின் பெரியப்பா மகன் தயாநிதி அழகிரி தயாரித்திருக்கும் திரைப்படம் என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் வந்திருக்கும் படம் தான் தகராறு. அதுத்தவிர, 4-திருடர்கள் பற்றிய கதை என்பதால் முதலில் இப்படத்திற்கு பகல் கொள்ளை எனப் பெயர் சூட்டினோம்... எங்கள் குடும்பத்தயாரிப்பு என்பதால் அந்த தலைப்பு பலரது ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகும் என்று யோசித்து தகராறு என டைட்டிலை மாற்றினோம்... அதுவும் உங்கள் குடும்பத் தகராறா? என சிலரால் கேள்வியாக்கப்பட, இவர்களுக்கெல்லாம் யோசித்தோமென்றால், படம் பண்ணமுடியாது கதைக்கு ஏற்ற தலைப்பு வைக்க முடியாது... என கருதி தகராறு டைட்டிலையே இறுதியாக்கி உறுதி செய்தோம்... என்றெல்லாம் அருள்நிதி, இப்பட ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்து... அதனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தகராறு

மதுரை பக்கத்து 4 பீரோ புல்லிங் கொள்ளையர்கள் பற்றிய கதை! ஆனாலும் அருள்நிதியின் காதலும், அதனால் எழும் மோதலும் தான் தகராறு மொத்தப்படமும்! சரவணன் - அருள்நிதி, செந்தில் - பவன்ஜி, பழனி - சுலில் குமார், ஆறுமுகம் - முருகதாஸ் ஆகிய நால்வரும் சின்ன வயது முதல் நண்பர்கள், அநாதைகள். சின்ன வயது முதல் சின்ன சின்ன திருட்டில் ஆரம்பித்து பீரோ புல்லிங் கொள்ளையர்களாக கொடி கட்டிப்பறக்கும் நால்வரும், பக்கெட் எனும் பாவா லட்சுமணனின் குடியிருப்பில் தங்கி, பெரிய பெரிய வீட்டு பீரோவில் எல்லாம் கை வைக்கின்றனர்.

ஒருநாள் கோயில் பரிவட்டத்திற்காக ஏங்கும் ஊர் பெரிய மனிதர் அருள்தாஸ் வீட்டு பீரோவில் கை வைக்கும் நால்வரும் வகையாக மாட்டிக் கொள்கின்றனர். அவர், நால்வருக்கும் ஒரு சிலை திருட்டு வேலையை கொடுக்கிறார். அது அவரது மதிப்பு மரியாதையை மீட்டெடுக்க உதவுகிறது. ஆனாலும் அருள்தாஸ்க்கும், அவர்களுக்குமிடையில் பண விவகாரத்தில் ஈகோ தகராறு. என்றைக்கானாலும் உங்களை ஒரு கை பார்க்காது விடமாட்டேன்... என எச்சரித்து அனுப்புகிறார் அருள்தாஸ். மற்றொருபக்கம், மதுரையின் பிரபல கந்துவட்டி தாதா ஜெய்பிரகாஷின் மகள் பூர்ணாவை விபத்தொன்றில் யதார்த்தமாக காபந்து செய்து காதலிக்க தொடங்குகிறார் அருள்நிதி. மொத்தபடத்திலும் பதார்த்தமாக பவனி வரும் பூர்ணாவால் நண்பர்களுக்குள் பஞ்சாயத்து. பூர்ணாவின் தாதா அப்பா ஜெ.பி.யால் இவர்களது உயிருக்கு ஆபத்து. இவை ஒருபக்கமென்றால் மற்றொருபக்கம் அந்த ஏரியாவுக்கு பொறுப்பேற்று வரும் புது இன்ஸ்பெக்டர் பாண்டிரவி வீட்டிலேயே ஆட்டையை போடும் இந்த நால்வரும் அடுத்தடுத்து பண்ணும் கலாட்டாக்களால் அவருடனும் முட்டல், மோதல் தகராறு... இந்நிலையில் நால்வரில் ஒருவரான சுலில்குமார், பவன்ஜி கண் எதிரிலேயே கழுத்தறுத்து கொல்லப்பட, அவரைக் கொன்றது யார்? என கண்டுபிடித்து அவர்களை பழிவாங்க களமிறங்குகிறது மூவரணி! அதில் அவர்களுக்கு வெற்றியா? அல்லது வெட்டி சாய்க்கப்பட்டனரா...? என்பது க்ளைமாக்ஸ்!

முந்தைய படங்களைக்காட்டிலும் அருள்நிதி, இதில் வித்தியாசமான முகபாவங்களைக்காட்டி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றால் மிகையல்ல. அவரது பீரோ திருட்டு மதிநுட்பம், பூர்ணாவுடனான காதல் கண்ணாமூச்சி, எக்ஸ்கியூஸ்மி உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே... என பேசியபடி கலர்கலர் டிரஸ்ஸால் அவர் அடிக்கும் லூட்டி, தனக்கு சின்ன வயதில் அந்த நால்வரணியில் இடம் கொடுத்த நண்பன் சுலில்குமார் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் தவிப்பு... அதனூடே கல்யாணத்திற்கு அவசரப்படும் பூர்ணாவுக்கு பண்ணும் அட்வைஸ் என எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்து நடித்திருக்கிறார் அருள்நிதி. அதிலும் ஆக்ஷ்ன் காட்சிகளில் ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் ஆஜானுபாகுவாக அரிவாளும், கையுமாக வந்து எதிராளிகளை சிதறடிக்கும் சீன்களில் மனிதர் வெளுத்து கட்டியிருக்கிறார்.

பூர்ணா டிப்பிக்கல் மதுரை பெண்ணாக வீரமும், தீரமுமாக வந்தாலும் காதலில் கசிந்து உருகிறார். க்ளைமாக்ஸில் அம்மணியின் வில்லி அவதாரம் முன்கூட்டியே பூகிக்க முடிவதால், கொஞ்சம் பொசுக் கென்றாகி விடுகிறது. ஆனாலும் மதுரையை காபந்து செய்ய அந்த மீனாட்சி, இந்த சரவணனை காக்க இந்த மீனாட்சி என்று சுத்தியலும், கையுமாக எதிராளியை சாய்த்து கேரக்ட்ராகவே மாறிட அவர் பேசும் வீரதீர வசனங்கள், அந்த பொசுக்கை நசுக்கி பொசுக்கி விடுகிறது.

அருள்நிதியின் நண்பர்களாக வரும் பவன்ஜி, சுலில் குமார், முருகதாஸில் தொடங்கி கந்துவட்டி ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், இன்ஸ பாண்டிரவி, செந்தி, டாஸ்மாக் பாரை போதையில் வீட்டுக்கே தள்ளிப்போகும் மயில்சாமி வரை எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

தில்ராஜின் ஒளிப்பதிவு - வெல்டன் ராஜ்! என சொல்ல வைக்கிறது. தரண்குமாரின் பாடல்கள் இசையும், பிரவீன் சத்யாவின் பின்னணி இசையும் தகராறு படத்தை ராயல் தகராறு ஆக்கிவிடுகின்றன!

பொதுவாக திருடர்கள் ஒளிந்து மறைந்து வாழ்வார்கள்... இதில், போலீஸையே பொளந்து கட்டுவதும், டீக்கடை, மதுக்கடை என 4 திருடர்களும் சகஜமாக அலைந்து திரிவதும், ஊர் வம்பு வளர்ப்பதும் நம்பும் படியாக இல்லாததும், அரிவாள், சுத்தியள்... என்று இரத்தவாடை படம் முழுக்க வீசுவதும், இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு பார்த்தால் புதியவர் கணேஷ் விநாயக்கின் எழுத்து - இயக்கத்தில் தகராறு - வெகுஜோரு!

நன்றி - தினமலர்

இவன் வேற மாதிரி - தி இந்து விமர்சனம்

 

இவன் வேற மாதிரி - 'தி இந்து' விமர்சனம்

ivan vera mathiri review

பெரும்பாலான இயக்குநர்கள் தங்களுடைய முதல் படத்திலேயே மொத்தத் திறமையையும் காண்பித்துவிட்டு இரண்டாவது படத்தில் ஏமாற்றி விடுவார்கள். நல்லவேளையாக சரவணன் ரசிகர்களை ஏமாற்றவில்லை. அவரது முதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ போல சமூக விழிப்புணர்வுப் படமில்லை ‘இவன் வேற மாதிரி’. முழுமையான வணிகத் திரைப்படம். முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் இடையே நான் வேற மாதிரி என்று காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
சட்டக் கல்லூரி பிரச்சினையில் படம் ஆரம்பிக்கிறது. இந்தப் பிரச்சினைக்குக் காரணகர்த்தா சட்ட அமைச்சர். ஜெயிலில் இருக்கும் சட்ட அமைச்சரின் தம்பியான வம்சி ஒரு அரசியல் கொலை செய்ய பரோலில் வருகிறார். அவரை விக்ரம் பிரபு கடத்தி யாரும் இல்லாத இடத்தில் அடைத்துவிடுகிறார். ஜெயிலுக்குச் செல்ல வேண்டிய கெடு முடிகிறது.
பிரச்சினை பெரிதாக உருவெடுக்க சட்ட அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டிவருகிறது. கடத்தி வைத்திருக்கும் தம்பியை விக்ரம் பிரபு விடுவிக்க, விக்ரம் பிரபுவை வம்சி பழிதீர்த்தாரா என்பதுதான் த்ரில்லிங்கான இரண்டாம் பாதி.
இடையில் காதல் அத்தியாயமும் உண்டு. இரண்டரை மணிநேரப் படத்தை ஆக்ரமிப்பது சரவணனின் திரைக்கதையும் வசனங்களும்தான். ஒரு சிறிய க்ளூவை வைத்து யார் கடத்தியது என்று கண்டுபிடிக்கும் எபிசோட் பிரமாதம். “எனக்கு 22 வருட அனுபவம்,’’ “இல்லை நீங்க 22 வருஷ பழைய ஆள்”, “நான் இன்னும் சாகல, நாளைக்கு வா” என வசனங்களால் விளையாடியிருக்கிறார் சரவணன்.
முதல் பத்து நிமிடங்கள் அதிக வசனம் இல்லாமல் பின்னணி இசையில் மட்டுமே படம் பயணிக்கிறது. சட்டக் கல்லூரி கலவரத்தின் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபடியே மீள்பதிவு செய்திருக்கிறார். ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும் திரைக்கதைக்குப் பக்கபலமாக இருக்கின்றன. ஆக்‌ஷன் - த்ரில்லர் படத்துக்கான பதற்றத்தையும் வேகத்தையும் இவர்கள் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
பிச்சைக்காரர்களுக்குச் சாப்பாடு போடுவது, துணிமணி எடுத்துக்கொடுப்பது ஆகிய கிளிஷேக்கள் உள்ளன. வலிந்து திணிக்கப்பட்ட காதல் காட்சிகளும் இருக்கின்றன. கைது செய்ய வரும் போலீஸைக் கொலை செய்வதில் கொஞ்சமும் லாஜிக் இல்லை.
கதை என்று பார்த்தால் புதிதாக எதுவும் இல்லை. நிஜ வாழ்வில் சட்டக் கல்லூரியில் நடந்த கலவரத்துக்குப் பின்னணி சாதி வெறி. இயக்குநர் அந்தக் கலவரத்தைத் தொட்டுக்கொள்கிறார். ஆனால் சாதியை விட்டுவிடுகிறார். தமிழ் சினிமாவின் நிரந்தர வில்லன்களில் ஒருவரான கெட்ட அரசியல்வாதியை வைத்துக் கதையை நகர்த்துகிறார்.
இத்தகைய குறைகளை மீறி இரண்டரை மணி நேரம் இயக்குனர் நம்மைக் கட்டிப் போடுகிறார். அதற்காகவே அவரைப் பாராட்டலாம்.
நன்றி - தி ஹிந்து