Friday, December 27, 2013

என்றென்றும் புன்னகை - ஒன்இந்தியா விமர்சனம்

என்றென்றும் புன்னகை - ஒன்இந்தியா விமர்சனம்

endrendrum punnagai

Rating: 3.5/5

 நடிப்பு: ஜீவா, த்ரிஷா, சந்தானம், வினய், நாசர், ஆன்ட்ரியா
 
ஒளிப்பதிவு: ஆர் மதி
 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
 
தயாரிப்பு: தமிழ்க்குமரன்
 
வெளியீடு: ரெட் ஜெயன்ட்
 
இயக்கம்: அகமது
 
 
நட்பு மற்றும் உறவுகளின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள ஈகோ எத்தனை பெரிய தடையாக உள்ளது என்பதை ரொம்ப வண்ணமயமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்றென்றும் புன்னகையில்.

நாசர் மகன் ஜீவா சின்ன வயசாக இருக்கும்போதே, அவர் அம்மா வேறொருவருடன் ஓடிப் போகிறார். இதை தந்தை சொல்லக் கேட்டு பெண்கள் மீதே வெறுப்பு கொள்கிறார் ஜீவா. வேறு பெண்ணை இரண்டாவதாக நாசர் மணந்து கொள்ள, தந்தை மீதும் மகா வெறுப்பு. அந்த வெறுப்புக்கு பயந்து மனைவியை பிரிந்து மகனே உலகம் என நாசர் வாழ்ந்தாலும், அவருடன் பேச மறுக்கிறார் ஜீவா. பள்ளியில் நண்பர்களாக அறிமுகமாகும் சந்தானம் மற்றும் வினய்தான் ஜீவாவின் உலகம். மூவரும் திருமணமே செய்து கொள்ளாமல் 'மொட்டப் பசங்களாகவே' இருப்போம் என சத்தியம் செய்து கொண்டு, கூடிக் குடித்து மகிழ்கிறார்கள். அப்போதுதான் த்ரிஷா வருகிறார் அவர்கள் வாழ்க்கையில். செய்த சத்தியத்தை மீறி சந்தானமும் வினய்யும் வீட்டில் பார்க்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ள, ஜீவா நண்பர்களை வெறுத்து தனி மரமாகிறார். இவர் வாழ்க்கையில் காதலும், நட்பும் எப்போது எப்படி நுழைகிறது, தந்தை மீதான வெறுப்பு எப்படி மறைகிறது என்பது க்ளைமாக்ஸ். அதிரடித் திருப்பங்கள், ஆக்ஷன் காட்சிகள், கொப்பளிக்கும் ரத்தக் குழம்புகள் என எதுவும் இல்லாத படம் இது.
 
ஆனால் காட்சிகளின் அழகும், வண்ணமும் - அவற்றின் செயற்கைத் தன்மையை மீறி - ரசிக்க வைக்கின்றன. தாங்க்ஸ் டு ஒளிப்பதிவாளர் ஆர் மதி மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்! இந்த இருவரும் இல்லாவிட்டால், நிச்சயம் இந்தப் படம் தேறியிருக்காது. மதி படம் பிடித்திருப்பது நம்ம சென்னையைத்தானா என்ற சந்தேகம், நிகழ்வுகள் சுவிட்சர்லாந்துக்கு மாறும் வரையிலும் தொடர்கின்றன. எப்போதும் மழையில் குளித்து வந்த மாதிரியே தெரிகிறது சென்னை. அதேபோல சுவிட்சர்லாந்து காட்சிகளில், நிஜமாகவே பனிக்குளிரை அனுபவிக்கிறது மனசு. படம் நெடுக ஒரு அழகிய நாயகியைப் போல நம்மை தொட்டும், இறுகத் தழுவியும் இனிமைப்படுத்துகிறது ஹாரிஸ் ஜெயராஜ் இசையும் பாடல்களும். காட்சிகளின் நேர்த்தியைப் பார்த்ததும் ஹாரிஸின் கற்பனை துள்ளிக் குதித்திருப்பதை உணர முடிகிறது.

படத்தில் ஜீவா, சந்தானம், வினய், த்ரிஷா, ஆன்ட்ரியா, நாசர் என ஆறு பேருக்குமே கிட்டத்தட்ட சம வாய்ப்புகள்தான். அத்தனை பேரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். அநாவசிய நட்பு அல்லது காதல் தத்துவங்கள் எதுவும் இல்லாதது பெரிய ஆறுதல். ஜீவா பெண்கள் மீது வெறுப்பைக் கக்கும் போதெல்லாம், எதுக்கு இவ்ளோ டென்ஷனாகிறார் என பார்வையாளர்களே கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் தெரிய வரும்போது, கன்வின்ஸ் ஆக வைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்திய திரைக்கதை. ஏக சர்ச்சைகளில் சிக்கியிருந்த சந்தானத்துக்கு இது மறுபிறவி எனலாம். படத்தில் எங்குமே ஆயாசம் தெரியாமல் இருக்க முக்கிய காரணம் சந்தானம்தான். அந்த சர்ச்சைக்குரிய அஞ்சு பத்து வசனக் காட்சியை அழகாக மாற்றியிருக்கிறார். வெல்டன். வினய் ஒரு நடிகர் மாதிரி இல்லாமல், அந்தக் கதைக்கான ஒரு பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இதற்கு முன் வந்த படங்களில் இருந்ததைவிட இயல்பான நடிப்பு.
த்ரிஷா பிரமிக்க வைக்கிறார். இத்தனை ஆண்டுகள் ஒரு நடிகை தன் அழகைப் பாதுகாப்பது பெரும் சவால்தான். அதில் நூறு சதவீதம் ஜெயித்திருக்கிறார். மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். குறிப்பாக அந்த சுவிட்சர்லாந்து காட்சியில், பனியில் மிதந்து வரும் தேவதை போல அத்தனை அழகு. ஜீவா - த்ரிஷா காட்சிகளில் அபார ரசாயன மாற்றம் (அதாங்க கெமிஸ்ட்ரி!) இத்தனை சிறப்புகள் இருந்தாலும் படத்தில் எதற்காக தடுக்கினால் ஒரு சரக்குப் பார்ட்டி அல்லது குடி காட்சி? அதிலும் ஒருபடி மேலே போய், டாஸ்மாக் பாருக்குப் பதில், வீட்டுக்குள்ளேயே, தந்தை முன்னிலையில் அல்லது அவருடன் சேர்ந்தே சரக்கடிப்பது சகஜமான சமாச்சரம் என காட்டியிருக்கிறார் இயக்குநர். இனி 'மது நாட்டுக்கு, வீட்டுக்கு நல்லது... அனைவரும் சேர்ந்து சரக்கடிப்போம்' என முன்குறிப்பு போட்டே படத்தைத் தொடங்குவார்கள் போலிருக்கிறது.
படம் முழுக்க நண்பர்கள் மூவரும் சேர்ந்தால் ஒன்று சரக்கடிக்கிறார்கள்... அல்லது கழிவறையில் கதையளந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல அந்த க்ளைமாக்ஸ் காட்சியில், ஜீவா த்ரிஷாவிடம் பேசும்போதி ஒரு இயல்புத்தன்மையோ, உணர்ச்சியோ.. தன் கைவிட்டுப் போகவிருந்த அரிய உறவு கிடைத்ததே என்ற குறைந்தபட்ச மகிழ்ச்சி கூட இல்லாமல், ஏதோ சடங்குக்குப் பேசுகிறார். படத்தின் முக்கிய காட்சியை இப்படி ஏனோ தானோ என்றா எடுப்பார்கள். கடற்கரையில் வைத்து ஜீவாவை த்ரிஷா கேட்கும் அத்தனை கேள்விகளும் சரியானவை. ஒரு பெண்ணின் நியாயமான உணர்வும்கூட. ஆனால் அதை மதிக்கும்படியான, தன்னைப் போன்ற சக மனுஷியான அவளை சமாதானப்படுத்தும்படியான எந்த பதிலையும் ஜீவா சொல்லவே இல்லை. மாறாக ஐ லவ் யூ என்கிறார். ஐ லவ் யூ என்று சொல்லிவிட்டால், பெண் எல்லாவற்றையும் துடைத்துப்போட்டுவிடுவாள் என்று அர்த்தமா?

ஆனால் படத்தை ரசிக்க இவை எதுவுமே தடையாக இல்லை என்பது பார்வையாளர்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், அதுவும் அப்பாவுடன் குடிக்கிற காட்சிகளை கைத்தட்டி ரசிக்கும்போது, நாம் என்ன சொல்லி என்ன பயன்? இந்த வார இறுதியை என்றென்றும் புன்னகையுடன் கொண்டாடலாம்!

நன்றி - ஒன்இந்தியா

No comments:

Post a Comment